TAMILCINEMA
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

விஜய்-அஜீத் ரசிகர்கள் மோதல் ஏன்?

Go down

விஜய்-அஜீத் ரசிகர்கள் மோதல் ஏன்? Empty விஜய்-அஜீத் ரசிகர்கள் மோதல் ஏன்?

Post by Admin Thu Sep 19, 2013 1:35 am

சமீப காலமாக சமூக வலைதளங்களில் நடந்து வரும் விஜய்- அஜித் ரசிகர்களின் சண்டையை கவனித்து வருகிறேன். எதற்காக அந்த இரு நடிகர்களின் ரசிகர்களும் இப்படி அடித்து கொள்கிறார்கள் என்றே புரியவில்லை. விஜய் ரசிகர்கள் அஜித்தை மோசமான வார்த்தைகளால் அர்ச்சிக்கின்றனர். பதிலுக்கு அவர்கள் மிக கேவலமாக  விஜயை கேலி செய்கின்றனர். 

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இடையேயான போட்டி ஒன்றும் புதியதல்ல. MGR-சிவாஜி ரசிகர்கள் செய்யாததையோ, ரஜினி-கமல் ரசிகர்கள் செய்யாததையோ இவர்கள் செய்யவில்லைதான். ஆனால் நான் ஆச்சரியப்படும் விஷயம் விஜய்- அஜித் இடையேயான போட்டி எங்கிருந்து உருவானது? அது இயற்கையாக உருவானதா அல்லது உருவாக்கப்பட்டதா என்பதுதான்.

MGR-சிவாஜி இவர்களுக்கு இடையேயான போட்டியை எடுத்து கொண்டால் இவர்கள் திரை வாழ்விலும் சரி, அரசியல் வாழ்விலும் சரி இவர்கள் இரு துருவங்கள். ஒருவர் படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் மற்றவர் படத்தில் பணியாற்ற முடியாத அளவு இவர்களுக்கு இடையேயான போட்டி இருந்தது. இவர்கள் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் மேல் கொண்ட அபிமானத்தால் மற்ற நடிகர்கள் மேல் வெறுப்பு கொள்வது மிக இயல்பானது. 

ரஜினி-கமல் ரசிகர்களுக்கு இடையேயான மோதல்களை பற்றி சொல்லி தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. சில வருடங்கள் இவர்களில் ஒருவரின் படம் வெளி வந்தால் போதும். இன்னொருவரின் ரசிகர்கள் மாட்டு சாணமும் கையுமாக கிளம்பி விடுவார்கள். எங்கெல்லாம் அந்த படத்தின் போஸ்டர்கள் ஒட்டபட்டுள்ளதோ அங்கெல்லாம் சென்று சாணி அடித்து விட்டு வந்து விடுவார்கள். இதை காரணமாக வைத்து மறுநாள் இரு தரப்பு ரசிகர்களுக்கும் மோதல் மூளும். மோதல் என்றால் இப்போது நடப்பது போல பேஸ்புக் மோதல்கள் இல்லை. ரத்தம் வர அடித்து கொள்ளும் சண்டை அது. இந்த மோதல்கள் முற்றும்போது ரஜினியும் கமலும் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டு நாங்கள் நண்பர்கள்தான் என்று அறிக்கை கொடுப்பார்கள். இருந்தாலும் ரசிகர்கள் ஓய மாட்டார்கள். 

ரஜினியும், கமலும் நண்பர்கள்தானே? அவர்களின் ரசிகர்கள் ஏன் மோதி கொள்ள வேண்டும்? என்று யோசித்தால் நமக்கு கிடைக்கும் விடை இவர்கள் ரசிகர்கள் இவர்கள் மேல் கொண்ட பேரபிமானம். தாங்கள் விரும்பும் நடிகரே மற்றவரை விட பெருந்திறமை கொண்டவர் என்று இவர்கள் நம்பியதும் அதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று இன்னொரு நடிகரை மட்டம் தட்ட எடுத்த முயற்சிகளுமே இத்தகைய மோதல்களுக்கு காரணம். சம காலத்தில் தமிழ் திரையுலகில் இவர்களுக்கு இணையான  திறமை கொண்ட நடிகர்கள் எவரும் இல்லாததால் தங்கள் அபிமான நடிகர்களை உயர்த்தி பிடிக்க முயற்சித்த இவர்களின் முயற்சி புரிந்து கொள்ள கூடியதே.

[You must be registered and logged in to see this link.]

இப்போது  விஜய்-அஜித் போட்டிக்கு வருவோம். ரஜினி படம் நடிப்பதை குறைத்து கொண்டிருந்த சமயம். கமலோ ஆளவந்தான், மருதநாயகம்  போன்ற படங்களில் அதிக நேரத்தை செலவழித்து கொண்டிருந்தார். விஜயகாந்த் ஒரே மாதிரியான கதைகளில் நடித்து கொண்டிருந்தார். அது போன்ற சூழ்நிலையில் தமிழ் சினிமாவில் ஏற்பட்டு இருந்த வெற்றிடத்தை நிரப்புவது போல் விஜய், அஜீத், பிரசாந்த், அருண் விஜய் போன்றவர்களின் படங்கள் வெளி வந்து கொண்டிருந்தன. விஜய் அவருடைய தந்தையின் வழி காட்டுதலால் சிலவெற்றி படங்களை கொடுத்து படிப்படியாக முன்னேறி கொண்டிருந்தார்.  அஜீத்தும் சில வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களை சம்பாதித்து வைத்திருந்தார். அப்போதே விஜய்க்கு காதல் பற்றி வசனம் மட்டுமே பேச தெரியும், நடிக்க தெரியாது என அஜீத் ரசிகர்களும், அஜீத்துக்கு விஜய் அளவு நடனம் ஆட தெரியாது,  பாட தெரியாது என விஜய் ரசிகர்களும் விவாதம் செய்ய ஆரம்பித்து இருந்தனர்.

இது போன்ற விவாதங்கள் சிறிது காலத்தில் திறமையான  புது நடிகர்கள் வரவின்போது முடிந்து போய் இருக்கும்.  ஆனால் அப்படி முடிய விடாமல் அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றார் விஜய். சில வருடங்கள் முன் அஜீத்தின் தீனா படம் வெளி வந்தது. அஜீத்துக்கு  தல  என்று பேர் சூட்டிய படம் அது. அந்த படத்திற்கு அடுத்து வந்த தன்னுடைய படத்தில்(தமிழன்??)  விஜய் 'உன்னோட தலை, வாலு எல்லாத்தையும் வர சொல்லு' என்று வசனம் பேசுவார். அடுத்தடுத்து வந்த படங்களிலும் இதே போன்ற தாக்குதலை தொடர்ந்தார். ஒரு கட்டத்தில் அஜீத்தும் தன்னுடைய படங்களில் பதில் தாக்குதலை ஆரம்பிக்க ஆட்டம் சூடு பிடித்தது. உண்மையிலேயே விஜயும், அஜீத்தும் ஜென்ம விரோதிகள் என்று எண்ணி கொண்டு அவர்களின் ரசிகர்கள் மோதி கொண்டார்கள்.  பின்னாளில் சில காரணங்களுக்காக விஜய்  அஜீத்தை  தன்னுடைய நண்பராக காட்டி கொள்ள முயன்ற போதும் ரசிகர்கள் தங்களுக்கு இடையிலான மோதலை விடவில்லை. அதன் காரணம் இவர்களின் மோதல் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் மீதான அபிமானத்தால் உருவானதில்லை. மாறாக மற்ற நடிகர் மேலான வெறுப்பினால் உருவானது.

அது சரி, விஜய் ஏன் அஜீத்தை தாக்கி வசனம் வைக்க வேண்டும்? அவர் கூட வாய்க்கால் தகராறா? இல்லை, இவரின் பட  வாய்ப்புகளை அஜீத் கைப்பற்றி எடுத்து கொண்டாரா?   இரண்டுமே இல்லை. அது விஜய் பின் பற்றிய ஒரு யுக்தி. அருமையாக திட்டமிடப்பட்டு கட்டமைக்கப்பட்ட தன் திரை  வாழ்க்கையில் தன்னுடைய முன்னேற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக அஜீத்தை தன்னுடைய எதிரியாக விஜய் சித்தரித்து கொண்டார். இதனால் அஜீத்தும் ஓரளவு பயனடைந்தார். கடைசியில் திரைக்கு வெளியே நடந்த நாடகத்தை உண்மை என நம்பி இன்றும் மோதி கொண்டிருப்பவர்கள் ரசிகர்கள்தான்.

நினைவுகளில் இருந்து எழுதப்பட்டது. விஜயும், அஜீத்தும் எப்போது தங்களை எதிரிகளாக காட்டி கொண்டனர் என்று தரப்பட தகவலில்  ஏதேனும் தவறு இருப்பதாக யாரேனும் நிறுவினால் இந்த பதிவை எடுத்து விடுகிறேன்.
vathikuchi.blogspot.

Admin
Admin

Posts : 105
Join date : 13/09/2013

https://tamilcinema.forumotion.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum